Friday, August 3, 2012

வெற்றிலைக்கு போடப்படும் வாக்கு பள்ளிவாசலை உடைக்கும் வேட்டு:வேட்பாளர் யூ.எல்.எம்.என். முபீன்!

வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
முஸ்லிம்கள் எவரும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் அநியாயங்களை முஸ்லிம்கள் பார்த்த பிறகும் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என்றால் அது நாம் நமது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் அங்கீகாரமாகும்.
தம்புள்ளயில் பள்ளிவாசலை உடைத்தபோது அதை அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதேபோன்று தெஹிவளை யில் பள்ளிவாசல் மீதும் பேரினவாத சக்திகள் காடைத்தனம் செய்தன.
குருநாகலிலுள்ள கிராம மொன்றில் பள்ளிவாசலில் நோன்புக் காலத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பள்ளிவாசலைச் _ற்றிவளைத்த பேரினவாத பௌத்த தேரர்கள் “பிரித்” ஓதினார்கள்.
இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றப்படும் இந்த அராஜகங்கள் முஸ்லிம்களின் புனித பள்ளிவாசலை உடைக்க முற்படும் இவ்வாறான நடவடிக்கைகள் முஸ்லிம்களின் புனித பள்ளி வாசல்களை அப்புறப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவைகளை எல்லாம் பார்த்த பிறகும் முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க முடியாது. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமின் குரல் முதன் முதலாக காத்தான்குடியில் ஒலித்தபோதுதான் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் வாய் திறக்க ஆரம்பித்தனர்.
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாற்றுக் கட்சியிலிருந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் அணிதிரளுகின்றனர். எனவேதான் வாக்குகளைச் சிதறடிக்காமல் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.
Thnaks: neruppu.com