”எனது தாய் நாட்டைச் சேர்ந்த சகோதர உள்ளங்களே, எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகி பிரார்த்தியுங்கள்.” இவ்வாறு இறைஞ்சிக் கேட்டுள்ளார் எஜமானரின் குழந்தையை கொன்றார் என்கிற வழக்கில் சவூதி அரேபியாவில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா நௌபீக்.
அவர் இவ்வேண்டுகோளில் தெரிவித்து உள்ளவை வருமாறு:-
”ஹச் பெருநாள் தற்போது கொண்டாடப்படுகின்றது. இது நான் காண்கின்ற இறுதியான ஹச் பெருநாளாக கூட இருக்கலாம். ஏனெனில் எனது தலை விதி மிக விரைவில் நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.
நான் நிரபராதி என்று காணப்பட்டால் எனது நாட்டுக்கு, வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவேன். இல்லையென்றால் என்னை சிரச் சேதம் செய்து விடுவார்கள்.
பெற்றோரையும், உடன்பிறப்புக்களையும் காப்பாற்றுகின்றமைக்காக மாத்திரம், சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக வந்து சேர்ந்த மூதூர்க் கிராமத்து வறிய குடும்பத்துப் பெண் ஒருவரின் வாழ்க்கையின் முடிவாக அது இருக்கும்.
வீட்டில் வறுமையும், வெறுமையும் கொடுமை செய்தன. இதனால் அப்பா என்னை பணிப்பெண்ணாக சவூதிக்கு அனுப்பும் தீர்மானத்தை எடுத்தார். அம்மாவுக்கு இத்தீர்மானத்தில் சற்றுக் கூட உடன்பாடு இருக்கவில்லை.
சாப்பிட்டாலும் சரி, பட்டினி கிடந்தாலும் சரி எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்பது அம்மாவின் கருத்தாக இருந்தது. ஆம். நாங்கள் சில வேளைகளில்தான் ஏதோ சாப்பிட முடிந்திருக்கின்றது. அநேகமான நாட்கள் பட்டினிதான். நாம் ஒருபோதும் வயிறு நிறைய, பசி அடங்க சாப்பிட்டமை கிடையாது. நான் நோன்பு இருக்கின்றமையாக எண்ணி பசியை தாங்கிக் கொள்வேன்.
ஆனால் என் உடன்பிறப்புக்கள் பட்டினி கிடக்கின்றமையை என்னால் தாங்கவே முடியவில்லை. எனவே நான் வீட்டின் நிலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு பணிப் பெண்ணாக செல்ல சம்மதம் தெரிவித்தேன். அப்பாவுக்கு மிகுந்த சந்தோசம். அம்மாவுக்கு விருப்பம் கிடையாது. அவர் அழுதார்.
கவலைப்பட வேண்டாம் என்று கூறி நான் ஆசுவாசப்படுத்தினேன். நாங்கள் எப்போதும் வறுமையில் வாட முடியாதுதானே? மூத்த பிள்ளை என்கிற வகையில் குடும்பத்தை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றதுதானே? எனவே நான் உறுதியான தீர்மானம் எடுத்து விட்டேன்.
நான் திருகோணமலையைத் தவிர எந்தவொரு பெரிய நகரத்தையும் கண்டிருக்கவில்லை. நான் பெரிய பஸ் நிலையத்தையோ, பெரிய ரயில் நிலையத்தையோ முன்பு கண்டிருக்கவில்லை. ஆனால் சீனக் குடா விமானப் படை தளத்தில் இருந்து ஆகாயத்தை நோக்கி விமானங்கள் பறந்து செல்லக் கண்டிருக்கின்றேன்.
ஆனால் நான் ஒரு விமானத்தில் பயணம் செய்வேன் என்று ஒரு காலமும் கற்பனையில்கூட நினைத்தமை கிடையாது. ஒரு நாட்டுக்கு தனியாக செல்கின்றமைக்கு என்னை நன்றாக மனத்தால் தைரியப்படுத்திக் கொண்டேன். பின் சவூதியில் என்ன நடந்தது? என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நான் மனத்தால் கூட இழைத்திராத குற்றத்துக்கு கடந்த ஐந்து வருடங்களாக சிறை வைக்கப்பட்டு இருக்கின்றேன். நான் விரைவில் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். இது ஒரு விடயமே அல்ல. ஆனால் நான் அக்குழந்தையை படுகொலை செய்து இருக்கவில்லை.
நான் ஒரு நிரபராதி என்று சத்தம் இட்டு உரத்துக் கூற விரும்புகின்றேன். ஒரு அப்பாவிக் குழந்தையை படுகொலை செய்யும் அளவுக்கு நான் கொடூரமான அரக்கி அல்லள்.
நான் அக்குழந்தைக்கு உணவு ஊட்டியது அது முதல் தடவை அல்ல. எப்போது அக்குழந்தை எனது பராமரிப்புக்காக கையளிக்கப்பட்டதோ அப்போதில் இருந்தே அக்குழந்தையை மிகுந்த பொறுப்புணர்வுடன் பார்த்து வந்திருக்கின்றேன்.
ஏனெனில் எனது குடும்பத்தவர்கள் ஒரு நாள் ஆவது மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்பதற்காக செய்யும் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்கிற மனப் பக்குவத்தில் இருந்திருக்கின்றேன். இரவோ, பகலோ என்னிடம் எந்த நேரத்திலும், என்ன வேலை சென்னாலும் சளைக்காமல் செய்ய தயாராகவே இருந்திருக்கின்றேன்.
எஜமானி அம்மா குழந்தைக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டது என்று கண்டபோது மிகவும் உக்கிர கோபம் அடைந்து அராபிய மொழியில் என்னைத் திட்டத் தொடங்கினார். ஆனால் அவர் என்ன சொல்லி திட்டினார்? என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எஜமானர் ஐயாவும் வந்து சேர்ந்தார்.
என்னை ஒரு உதைபந்து என்று எஜமானர் ஐயா எண்ணி விட்டார் போலும். மாறி மாறி கன்னங்களில் விளாசினார். நான் அல்லாஹ், அல்லாஹ் என்று கதறினேன். அவர்கள் ஆர் ஆரோவுக்கு எல்லாம் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். அதட்டினார்கள்.
என் மீது மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்குதல்கள் நடத்தினார்கள். நான் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவள்தான். ஆனால் குற்றவாளி அல்லள். என் பெற்றோர் ஒரு முறை கூட என் மீது கை வைத்தமை கிடையாது.
அவர்கள் குழந்தையை அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதற்கு இடையில் பொலிஸார் வந்து சேர்ந்தனர். என்னை சுட்டிக்காட்டி எஜமானரின் ஆட்கள் ஏதோ பொலிஸுக்கு சொன்னார்கள். நான் நடுங்கத் தொடங்கி விட்டேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே பொலிஸ் என்றாலே இனம் தெரியாத பீதி. பொலிஸார் எனக்கு கை விலங்கு பூட்டினார்கள். நான் அழுதேன்.
அவர்களுடன் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். நான் முதலில் மறுத்தேன். அவர்கள் அராபிய மொழியில் மிரட்டினார்கள். எனவே அவர்களுக்கு கீழ்ப் படிந்து நடந்தேன். என் மனதில் குடும்பத்தாரின் நினைவு கீழ் சூழ்ந்து கொண்டன.
அம்மாவை நினைத்துக் கொண்டேன். அம்மா... நான் எந்தப் பிழையும் செய்திருக்கவில்லை என்று சொல்லி உள்ளூர அழுதேன். அப்பாவியான என்னை அல்லாஹ் நிச்சயம் காப்பாற்றுவார் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். பொலிஸ் நிலையத்தில் என்னிடம் அராபிய மொழியிலான ஆவணம் ஒன்றை தந்து ஒப்பம் இட வற்புறுத்தினர். நான் தமிழில் ஒப்பம் இட்டுக் கொடுத்தேன்.
நான் சில பெண்களுடன் இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டேன். அப்பெண்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். ஆசுவாசப்படுத்தினர். அழ வேண்டாம் என்றனர். எனது கண்ணீரை சீலைத் துண்டால் துடைத்தனர். ஏதேதோ மொழியில் எல்லாம் அப்பெண்களில் சிலர் என்னிடம் கேட்டனர். நான் தமிழில் விளங்கப்படுத்தினேன்.
அவர்கள் நான் சொன்னவற்றை விளங்கிக் கொண்டார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களில் சிலருக்கு அரபு தெரிந்து இருந்தது. பொலிஸ்காரர் ஒருவரிடம் என்னை காட்டி வினவினர். பொலிஸ்காரனும் ஏதோ கூறினார். அப்பெண்களில் சிலர் சிங்களவர்கள். அவர்களின் அரவணைப்பில் நான் இருந்தேன்.
என் தாயின் அன்பை என்னிடம் காட்டினார்கள். இரு நாட்கள் கழிந்தன. பொலிஸார் என்னை கூண்டில் இருந்து வெளியில் கொண்டு சென்றனர். கறுத்த, பருத்த இந்திய மனிதர் வந்து என்னிடம் தமிழில் சில கேள்விகள் கேட்டார். அவரது தமிழ் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. தமிழ் திரைப்ப்டங்களில் கையாளப்படுகின்ற தமிழை விடவும் வேறுபட்டதாக இருந்தது.
ஆயினும் அவரது தமிழை கொஞ்சம் விளங்கிக் கொண்டேன். எனது கதையை உருக்கமாக அவருக்கு கூறினேன். நான் சவூதி அரேபியாவை சென்றடைந்து இரு வாரங்களுக்கு பின் முதன் முதல் அங்கு தமிழில் இன்னொருவருடன் உரையாடிய சந்தர்ப்பம் அதுவே. ஆனால் அந்த இந்தியர் நான் சொன்னவற்றை சரியாக விளங்கிக் கொள்ளவே இல்லை.
அம்மனிதர் மொழிபெயர்த்தவற்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்புப் புத்தகம் ஒன்றில் பதிந்து கொண்டார். குறிப்புப் புத்தகத்தில் அவ்வுத்தியோகத்தர் எழுதியவற்றுக்கு கீழ் என்னை கையொப்பம் இடக் கோரினர். நான் கையொப்பம் இட்டுக் கொடுத்தேன்.
எனது வாக்குமூலங்களை பதிவு செய்த பின் என்னை விடுதலை செய்வார்கள் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் எனது பேரவலம் அங்குதான் ஆரம்பம் ஆனது என்பதை பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். எனது வாழ்க்கை மீட்சி இல்லாத அந்தகாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருக்கின்றது என்பதை சில நாட்களில் உணர்ந்து கொண்டேன்.
அழுகின்றமையையும், அல்லாஹ்விடம் முறையிட்டு இறைஞ்சுகின்றமையையும் தவிர எனக்கு வேறு மார்க்கம் இருக்கவே இல்லை. நித்திரை செல்கின்றமைக்கு முன்னர் இரவு தோறும் எனது விடுதலைக்காக அல்லாஹ்விடம் தவறாமல் மன்றாடுவேன். காலையில் வேளைக்கு எழுந்து அல்லாஹ்வை பிரார்த்திப்பேன்.
எனது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுத்து நல்ல செய்தி தருவார் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது-இருக்கின்றது. சிறைச்சாலையில் குர்ஆன் படிக்கின்றமைக்கு தேவையான வசதிகள் உள்ளன. ஆனால் தற்போதைய சிறை வாழ்க்கை எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இல்லை.
எஜமானி அம்மாவின் வீட்டில் இரு வாரங்கள் மாத்திரம் வேலை செய்திருக்கின்றேன். ஆனால் மிகுதி நாட்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருக்கின்றேன். எனது பெற்றோர் என்னை நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்களின் வரவு எனக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. ஆயினும் அவர்களுடன் அதிகம் கதைக்க முடியவில்லை. அழத்தான் முடிந்தது.
எனக்காக சில மனிதாபிமானிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு எனது ஆயுள் காலம் முழுவதும் நன்றி உடையவளாக இருப்பேன். நான் சிரச் சேதம் செய்யப்பட்டாலும் கூட எனது இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்களின் உதவியை மறக்கவே மாட்டேன். அவர்களின் குடும்பங்களை அல்லாஹ் ஆசிர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
ஏனெனில் இந்த அவலைப் பெண்ணைக் காப்பாற்றுகின்றமைக்காகப் பெரும்தொகைப் பணத்தை செலவு செய்திருக்கின்றனர். எனது தாய் நாட்டைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் அனைவரும் எனது விடுதலைக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் மனம் உருகிப் பிரார்த்திக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகள் எனக்காக அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும்.
ஹச் பெரு நாள் நிறைவடையும் வரை எவருக்கும் சவூதியில் சிரச் சேதம் நடவாது என்பதை அறிந்து வைத்திருக்கின்றேன். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கை அரசுத் தரப்பினர், ஏனைய பிரமுகர்கள் என்று எனது விடுதலைக்காகப் பாடுபடுகின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாங்கள் உங்கள் அனைவரையும் இலங்கையில் சந்திக்க ஆசைப்படுகின்றேன். இல்லா விட்டால் நாங்கள் நிச்சயம் சொர்க்கத்தில் சந்திப்போம். நான் நிராபராதி. தூய்மையானவள். குற்றம் இழைக்காதவள். எனவே எனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு.”
சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு நன்றி
நன்றி தமிழ் சீ.என்.என்
அவருடைய விடுதலைக்கான மனுவில் ஒப்பமிட
http://www.petitiononline.com/Rizana/petition.html
http://www.change.org/petitions/view/stop_the_execution_of_rizana_nafeek_in_saudi_arabia